Home இலங்கை சமுர்த்தி திணைக்களத்தைத் துண்டாட மாட்டோம்! – அமைச்சர் உபாலி பன்னில உறுதி

சமுர்த்தி திணைக்களத்தைத் துண்டாட மாட்டோம்! – அமைச்சர் உபாலி பன்னில உறுதி

0
image

இலங்கையின் நுண்நிதித்துறையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் பாரிய சேவையாற்றி வருவதால், அதனை எந்த வகையிலும் விற்பனை செய்வதற்கோ அல்லது துண்டாடுவதற்கோ எவ்வித ஆயத்தமும் இல்லை என்று கிராமிய அபிவிருத்தி  அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார்.

அனைத்து இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 29 ஆவது தேசிய மாநாடு நேற்று முற்பகல் பத்தரமுல்ல, சுஹுருபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசு மிகக் குறுகிய காலத்துக்குள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களின் பல தசாப்த கால பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவற்றில் ஓய்வூதியப் பிரச்சினை, சம்பள மேலதிகக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினை, சம்பளக் குறியீடு தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி அவற்றுக்குத் தீர்வு காண்பது போன்றன பிரதானமானவை ஆகும்.

கடந்த அரசாங்கங்களின் காலத்தைப் போன்று சமுர்த்தி ஊழியர்களை இனிமேலும் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதில்லை. அரச ஊழியருக்குரிய கௌரவம் கிடைக்கும் வகையில் அவர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்குத் தேவையான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திணைக்களத்தை முடக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுவாகவும் பயனுள்ளதாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், சமுர்த்தி ஊழியர்களின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நடைமுறைகளை இவ்வருடத்துக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளேன்.  – என்றார்.

Source: https://samugammedia.com/we-wont-chop-up-the-samurthi-department—minister-upali-firmly-assures-1781155035

NO COMMENTS

Exit mobile version