இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்கு நீதி கோரி கத்தோலிக்க அருட்தந்தையர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை குற்றங்கள் நிறைந்த இராச்சியம், இங்கு யுத்தக்குற்றங்களும், இனவழிப்பும் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச அரங்குக்கு காண்பிக்கும் செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகிறது.
இந்த நாட்டில் வரி செலுத்துவதில் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளார்கள். சிங்களவர்களின் வரிப்பணத்தைக் கொண்டு காணாமல் போனோர் அலுவலகம், செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளை இந்த அரசாங்கம் வந்தததன் பின்னர் தீவிரப்படுத்தியுள்ளது.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அரச நிறுவனமாக காணப்பட்டாலும் அது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறது. புலிகள் அமைப்பால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிங்கள பொலிஸார், சிங்கள மக்கள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. என்றார்.
இதேவேளை உயிர்த்த குண்டுத்தாக்குதலை தடுக்க தவறியதற்காக பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை என்றால் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புக் கொண்டிருந்த இப்ராஹிமிற்கு என்ன தண்டனை வழங்க வேண்டும். குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்.இவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
