Home இலங்கை சிறைச்சாலைகளில் அசாதாரண சூழல்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

சிறைச்சாலைகளில் அசாதாரண சூழல்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை

0
image

இலங்கை சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அச்சமடைந்த நிலையில், இன்று (08) கொழும்பு மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குச் சென்று தமது பிள்ளைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, ‘குரல் அற்றவர்களின் குரல்’ அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும் உடனிருந்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முருகையா கோமகன், 

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில் அண்மையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது புதிய மகசின் சிறைச்சாலையில் நான்கு தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெலிக்கடை சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் அச்சநிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்ட சம்பவங்களை கருத்திற்கொள்ளும்போது, தற்போதைய நிலைமை குறித்து பெற்றோரும் கைதிகளும் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என முருகையா கோமகன் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பான வாக்குறுதிகளை நினைவுபடுத்தியுள்ளதுடன், இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று தமது விடுதலையை உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் ஏற்கனவே நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதற்கு, குறித்த குழு முன்வைத்த பரிந்துரைகளை விரைந்து நடைமுறைப்படுத்துவது அவசியம் எனவும், அந்த அறிக்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையும் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தியோ அல்லது நன்னடத்தை அடிப்படையிலேயோ விடுதலை செய்து, அவர்கள் தமது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்த முருகையா கோமகன், தாமும் சிறையில் இருந்தவர் என்ற அடிப்படையில் அவர்களின் வேதனையை புரிந்துகொள்ள முடியும் எனவும், எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/unusual-situation-in-prisons-call-to-ensure-the-safety-of-tamil-political-prisoners-1786182301

NO COMMENTS

Exit mobile version