Home இலங்கை சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு! விசாரிக்க இருவேறு குழுக்கள் நியமனம்

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு! விசாரிக்க இருவேறு குழுக்கள் நியமனம்

0
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வழங்கப்பட்ட இந்தத் தொகை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க இதனைத் தெரிவித்தார். 

உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், உயிரிழந்தவர்களின்  இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட சொத்துச் சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசேட குழுவும், மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக் கொண்டு கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோதலின் போது 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://samugammedia.com/compensation-of-2-million-rupees-for-officials-who-died-in-prison-clash-two-separate-teams-appointed-to-investigate-1783833650

NO COMMENTS

Exit mobile version