Home இலங்கை சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? – தரம் குறித்து சர்ச்சை

சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? – தரம் குறித்து சர்ச்சை

0
image

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் காரணமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடவுச்சீட்டை முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடவுச்சீட்டுக்கான கட்டணம் 6,000 ரூபாயாக தொடரும் நிலையில், கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசிவது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் குறித்த கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கையை 64 இலிருந்து 48 ஆகக் குறைப்பது சர்வதேச தரங்களுக்கு அமைவானது என்றும், பல நாடுகள் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், 5 மில்லியன் கடவுச்சீட்டுகளை கொள்முதல் செய்வதற்கான விலைமனு கோரல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் காணப்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/new-sri-lankan-passport-banned-in-some-countries—controversy-over-quality-1786254986

NO COMMENTS

Exit mobile version