Home இலங்கை சேவையில் அவமதிப்பு வேண்டாம் – வடக்கில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

சேவையில் அவமதிப்பு வேண்டாம் – வடக்கில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

0
image

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டத்திலும், யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் இன்று காலையில் (17) ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கெளரவக் குறைவு ஏற்படுமாறு பேசிமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்போது, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கான மகஜர்களை போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை வாகனப் பேரணியாகச் சென்று மகஜர் கையளித்தனர்.

மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன பூரண ஆதரவை வழங்கியிருந்தன.

 

இதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். 

வவுனியா மாவட்டசெயலகம் முன்பாக இன்று காலை இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. …

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,

வட மாகாணத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி  பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை செய்திருக்கிறார்கள். 

அரச சேவையில் இருந்துகொண்டே அந்த கட்டமைப்பிற்குள் இருக்கின்ற இன்னுமொரு சேவையினை மலினப்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். இதற்கு எமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தனர். 

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசேவையில் பதவியைவிட பரஸ்பர மரியாதையே முக்கியம், சேவையில் அவமதிப்பு வேண்டாம், நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா? போன்ற வாசகங்களை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். இதேவேளை தமது கோரிக்கைகள் அடங்கிய மகயரை மாவட்ட அரச அதிபருக்கும் வழங்கியிருந்தனர்.

 

Source: https://samugammedia.com/no-disrespect-in-service–development-officers-in-the-north-protest-1786952986

NO COMMENTS

Exit mobile version