Home இலங்கை சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

0
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம் காரணமாக, இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் தெரிவித்தார்.

குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்தின் முன்னேற்றத்துக்காக தற்போதைய அரசு வழங்கி வரும் ஊக்கவிப்பு நடவடிக்கைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட தலைவர், ஜனாதிபதியின் புதிய நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மிக விரைவாக ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதையும் வெகுவாகப் பாராட்டினார்.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இன்றியமையாத காரணியாகும் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசு கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான திசையில் புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டுக்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்காக அரசால் வழங்கக்கூடிய ஆகக்கூடிய ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாகவும், குறிப்பாகக் கொழும்பு துறைமுக நகர் வலயத்தை பிராந்தியத்தில் முன்னணி அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயமாக்குவதே அரசின் முதன்மை எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய தாராளமான ஆதரவுக்கும் நிதியுதவிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.

இந்த உயர்மட்டச் சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருடன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சு போ உள்ளிட்ட தூதுக்குழுவின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Source: https://samugammedia.com/president-meets-with-the-chairman-of-china-harbor-engineering-company-1781512181

NO COMMENTS

Exit mobile version