Home இலங்கை சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

0
image

சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்று இறைச்சிக்காக விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த விலங்குத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இத் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

திங்கட்கிழமை (10) இடம்பெற்ற இச் சோதனையின் போது, மாடுகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் அதிலிருந்த மாடுகளையும் பொலிஸார் முதற்கட்டமாகக் கைப்பற்றினர்.

பொலிஸாரைக் கண்டதும் காரில் வந்த இருவர் தப்பியோடிய போதிலும், பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி அவர்களை விரைவாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 25 மற்றும் 26 வயதுடைய சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் 530 மில்லிகிராம் மற்றும் 5 கிராம் 150 மில்லிகிராம் என மொத்தம் 10 கிராம் 680 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 7 மாடுகள் மற்றும் வங்காமம், இறக்காமம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை  நடத்தி வருகின்றனர். 

Source: https://samugammedia.com/luxury-car-smuggling-two-young-men-arrested-with-ice-drugs-1786860577

NO COMMENTS

Exit mobile version