2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மகளிர் பணியகம், பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் 2026 ஆம் ஆண்டுக்கான மீளெழுச்சி மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், நிறுவனப் பராமரிப்பு மற்றும் பாதுகாவலர் உரிமை, தெருவோர சிறுவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதித் திட்டம், முன்பள்ளி சிறுவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவு உள்ளிட்ட முக்கிய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக் கொடுப்பனவு வெறும் நிதி உதவியாக மட்டுப்படாமல், அவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில் உரிய கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், ‘டித்வா’ சூறாவளியால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டதுடன், தகுதியான சிறுவர்களுக்கு குறித்த உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களை பாதுகாப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த நடவடிக்கைகளுக்காக வலுவான தரவுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் துல்லியமான தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
