Home இலங்கை டித்வா சூறாவளிக்குப் பின்னர் அதிகரிக்கும் நிலச்சரிவு அபாயம் – 30,000 குடும்பங்கள் அதிக ஆபத்தில்!

டித்வா சூறாவளிக்குப் பின்னர் அதிகரிக்கும் நிலச்சரிவு அபாயம் – 30,000 குடும்பங்கள் அதிக ஆபத்தில்!

0
image

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்துக்குப் பின்னர் நாட்டின் சில பகுதிகளில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

NBRO-வின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர, இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய தொடர் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவுக்கான ஆபத்து அறிகுறிகள் தென்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டித்வா’ சூறாவளியின் போது நேரடியாக நிலச்சரிவு ஏற்படாத பகுதிகளிலும், மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ள இடங்களில் எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படும் கனமழையால் நிலச்சரிவு அபாயம் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்போது 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக ஆபத்தான நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் NBRO தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 15,000 அதிக ஆபத்தான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 5,000 குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எனினும், ‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்துக்குப் பின்னர் புதிதாக 16,793 குடும்பங்கள் அதிக ஆபத்தான நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, ‘டித்வா’ சம்பவத்துக்கு முன்னர் பாதுகாப்பானவை என அடையாளம் காணப்பட்டிருந்த சில பகுதிகளும் தற்போது பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியிருக்கலாம் என NBRO எச்சரித்துள்ளது.

எனவே, தமது பகுதிகளில் கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக அங்கு செல்ல வேண்டாம் என்றும் கலாநிதி வசந்த சேனாதீர கேட்டுக்கொண்டுள்ளார்.

“உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள். கனமழை பெய்யும் போது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/landslide-risk-increases-after-the-cyclone–30000-families-in-greater-danger-1789553107

NO COMMENTS

Exit mobile version