டீசல் விலை குறைக்கப்பட்டாலும், எதிர்வரும் 6 மாத காலத்திற்கு பஸ் கட்டணங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி முன்னெடுப்பது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எரிபொருள் விலை சூத்திரம் மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்படுவதால், அதன் அடிப்படையிலேயே பஸ் கட்டண திருத்தம் தீர்மானிக்கப்படும்.
எனினும், ஜூலை மாதத்தில் பஸ் கட்டணம் திருத்தியமைக்கப்பட்ட பின்னர் அல்லது அதற்கு முன்னதாக டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கு கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
கடந்த ஜூன் 1 ஆம் திகதி முதல் மாத இறுதி வரையான காலப்பகுதியில், தனியார் பஸ் போக்குவரத்துத் துறைக்கு நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம் மொத்தம் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், டீசல் விலை குறைந்தால் பஸ் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையும் உள்ளடக்கப்படவில்லை.
இதுவரை காலமும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே நாம் அதனைச் செய்து வந்தோம். ஆனால், இனிமேல் அவ்வாறு செய்யப் போவதில்லை. இது குறித்து எமக்கு எதிராக எவரேனும் வழக்குத் தொடர விரும்பினாலும் அதனை எதிர்கொள்ளத் தயார்” என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
