யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காங்கேசன்துறையில் இருந்து சிவகங்கை கப்பல் மூலம் நாகப்பட்டினத்திற்கு பயணிக்கவிருந்த 146 பயணிகளின் நடுவில் சிலர் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டதை அடுத்து சுங்க அதிகாரிகள் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனையின் போது இந்திய பிரஜைகளான இருவரின் உடைமைகளில் தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், சந்தேகத்தின் பேரில் 9 இலங்கையர்கள் மற்றும் 17 இந்தியர்கள் என மொத்தம் 26 பேர் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில் 28 பேரை தவிர்த்து மீதமுள்ள 118 பயணிகள் இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில், 6 பேர் தங்கக் கட்டிகளை விழுங்கி கடத்த முயன்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் இரண்டு இலங்கை பெண்கள் மற்றும் நான்கு இந்திய ஆண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க கட்டிகளை விழுங்கியவர்களின் தங்க கட்டிகளை மீட்க வைத்தியசாலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 09 பேர் தொடர்பிலும் சுங்க திணைக்களம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை 26 பேரில் நேற்றையதினம் 17 பேருக்கு ஸ்கானிங் செய்யப்பட்ட நிலையில் ஏனைய 09 பேருக்கும் இன்றையதினம் ஸ்கானிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
