யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பூனேவா பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டது.
மோதலின் பின்னர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த 56 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பூனாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
