திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கபரணை நோக்கி இந்தியத் தம்பதியினர் பயணித்த காரும், கபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாக வந்த உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.
காரில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறி, கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காரை ஓட்டி வந்த இந்திய கணவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயங்களுக்கு உள்ளான அவரது மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவ்விபத்துக்கான முதன்மை காரணம் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
