Home இலங்கை தெவிநுவர எசல பெரஹரவில் காவடி ஆட்டத்திற்கு தற்காலிக தடை – பொலிஸ் நடவடிக்கை

தெவிநுவர எசல பெரஹரவில் காவடி ஆட்டத்திற்கு தற்காலிக தடை – பொலிஸ் நடவடிக்கை

0
image

தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரவில் இடம்பெறவிருந்த காவடி ஆட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பெரஹர தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் தலைவர், தேசிய புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவடி ஆட்டம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் என புலனாய்வு அறிக்கைகளில் தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் காவடி நடன அங்கத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் இந்தப் பரிந்துரை தொடர்பில் மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, உத்பலவர்ண தேவாலய பஸ்நாயக்க நிலமேவுக்கு நேற்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த பெரஹர ஊர்வலத்தின்போது காவடி ஆட்டம் இடம்பெறுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Source: https://samugammedia.com/temporary-ban-on-kavadi-dance-at-devinuwara-esala-perahera—police-action-1785130626

NO COMMENTS

Exit mobile version