Home இலங்கை தேர்தல்களில் விரலில் மை வைக்கும் நடைமுறைக்கு முடிவு!

தேர்தல்களில் விரலில் மை வைக்கும் நடைமுறைக்கு முடிவு!

0
image

இலங்கையில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அடையாளமிடப் பயன்படுத்தப்படும் ‘அழியாத பூச்சு’ (மை) நடைமுறையை முழுமையாக நீக்குவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அமைச்சரவைத் தீர்மானங்களின்படி, ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைக்கு அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில், வாக்காளர்கள் தங்களது செல்லுபடியான அடையாள அட்டையை சமர்ப்பித்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதும், வாக்களித்த பின்னர் விரலில் அழியாத மை பயன்படுத்தி அடையாளமிடப்படுவதும் கட்டாய நடைமுறைகளாக இருந்து வந்தன.

ஒரு வாக்காளர் ஒரே தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களிப்பதைத் தடுப்பதே இந்த இரண்டு நடைமுறைகளின் பிரதான நோக்கமாக இருந்தது.

எனினும், ஒரே நோக்கத்திற்காக இரண்டு தனித்தனி முறைகள் பின்பற்றப்படுவதால் வாக்குச்சாவடிகளில் பணிகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும், அரசாங்கத்திற்கு தேவையற்ற மேலதிக செலவுகள் உருவாகுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடையாள அட்டையின் மூலம் வாக்காளரின் ஆளடையாளம் கட்டாயமாக உறுதிப்படுத்தப்படுவதால், இனிமேல் அழியாத மையைப் பயன்படுத்தும் சட்ட ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் நீக்குவது பொருத்தமானது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் சட்டம், பாராளுமன்றத் தேர்தல் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச்சட்டம் மற்றும் மக்கள் தீர்ப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் உள்ள தொடர்புடைய பிரிவுகளை நீக்குவதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Source: https://samugammedia.com/decision-to-put-an-end-to-the-practice-of-marking-with-ink-on-fingers-in-elections-1782222768

NO COMMENTS

Exit mobile version