நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில், தாயினால் கைவிடப்பட்ட நிலையில் தந்தையின் பராமரிப்பில் இருந்த 11 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக வவுனியா பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தெரிவித்தார்.
இதனையடுத்து எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு நடவடிக்கைகளின்போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், அத்துடன் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஆகியவை கடுமையான தண்டனை விதிக்கப்படுவதற்கான காரணங்களாக அமைந்ததாக நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
இவ்வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.
