கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா 2026ஐ முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்தியத் துணைத்தூதரகத்தின் அழைப்பின் பேரில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தமது பாரியாருடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைமாமணி சாரதா ராகவ்வின் தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், சிறப்பான குரல் வளம், இசை நயம் மற்றும் பக்தி உணர்வுடன் பாடல்கள் வழங்கப்பட்டதுடன், அவருடன் இணைந்து பங்கேற்ற கலைஞர்களின் இசை வழங்குகையும் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
கலைமாமணி சாரதா ராகவ்வுடன் மிருதங்கக் கலைஞர் ரமேஷ், விசைப்பலகை கலைஞர் ராஜினிகாந்த் உள்ளிட்ட இசைக் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தி.வேல்நம்பி, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மோகனதாஸ், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
