Home இலங்கை நாசிச பாணியிலான ஆட்சி முறைமையை திணிக்கின்றது அரசு – மொட்டுக் கட்சி கடும் சாடல்

நாசிச பாணியிலான ஆட்சி முறைமையை திணிக்கின்றது அரசு – மொட்டுக் கட்சி கடும் சாடல்

0
image

தற்போதைய அரசு தனது கட்சியின் தொண்டர்கள் மூலம் அரச நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களையும் கட்டுப்படுத்தும் ஒரு விசித்திரமான மற்றும் ஜனநாயகத்துக்குப் புறம்பான ஆட்சி முறையைத் திணிக்க முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டினார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், அரச இயந்திரத்தையும் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற ரீதியில் தற்போதைய அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

கிராம உத்தியோகத்தர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பதவிகளை, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தொண்டர்களே வழிநடத்த வேண்டும் என்று அவர்கள் முனைகின்றார்கள். இது ஹிட்லரின் நாசிச ஆட்சியைப் போன்றது.

தங்களுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் போதாது என்று அமைச்சர் எரங்க குணசேகர போன்றோர் கருத்து வெளியிடுகின்றனர். 

நாட்டை ஜனநாயக ரீதியில் ஆளாமல், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஒரு கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றனர். 

ஹிட்லர் அன்று ‘தேசிய சோசலிசம்’ என்ற போர்வையில் தனது கொடூரமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது போல், இவர்களும் அழகான வார்த்தைகளைக் கூறிக்கொண்டு, ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் கருத்துக்களை இந்த நாட்டுக்குள் திணிக்கப் பார்க்கின்றனர்.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவரும், தமக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற இந்த விகாரமான ஆட்சி மாதிரியைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். 

ஜனநாயகத்தை முற்றாக நிராகரிக்கும் இத்தகைய அச்சுறுத்தும் போக்கினை, மக்கள் விழிப்புணர்வுடன் அவதானிக்க வேண்டும்.” – என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/the-government-is-cracking-down-on-the-nazi-style-governance—the-opposition-party-strongly-criticizes-1784118511

NO COMMENTS

Exit mobile version