Home இலங்கை நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கும் – உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கும் – உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

0
image

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்  சுசில் ரணசிங்க ஆகியோர், 2026 ஜூன் 4 ஆம் திகதி குருநாகலில் அமைந்துள்ள பத்தினிகம மாதிரி கிராமத்தை இணைந்து திறந்து வைத்து, 24 பயனாளிக் குடும்பங்களிடம் கையளித்தனர்.

 இந்நிகழ்வில் வடமேற்கு மாகாண ஆளுநர்  திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சுஜீவ இந்திக திஸாநாயக்க உள்ளிட்ட சிறப்புமிக்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் இலங்கையின் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின்  அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும்  அதிகாரிகள், அத்துடன் குருநாகல் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தனது முக்கிய உரையில் உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா, இலங்கையின் தேசிய அபிவிருத்திக்கான இந்தியாவின் நீடித்த அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஆதரிப்பதிலும் இந்தியா உறுதியான பங்காளியாக தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம், இலங்கையின் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன் இணைந்து, இந்திய அரசின் நன்கொடை உதவியுடன் தீவின் அனைத்து 25 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2017 அக்டோபரில் கையெழுத்திடப்பட்டது. 

இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கையின் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 வீடுகளைக் கொண்ட ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு, மாவட்ட வீடமைப்பு குழுக்களால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுவரை மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய 17 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

திட்டத்தின் மொத்த நிறைவு நிலை தற்போது சுமார் 98.5% ஆக இருப்பதுடன், மீதமுள்ள கிராமங்களும் விரைவில் அந்தந்த சமூகங்களுக்கு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/high-commissioner-santosh-jha-will-support-the-overall-development-of-communities-across-the-country-1780654562

NO COMMENTS

Exit mobile version