Home முக்கியச் செய்திகள் நாய் கூண்டுகளில் சிறுமிகள் ; 700 ஆண்களால் வன்புணர்வு

நாய் கூண்டுகளில் சிறுமிகள் ; 700 ஆண்களால் வன்புணர்வு

0

இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அரங்கேறி வந்த சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளன. இக்கும்பல் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளைக் குறிவைத்துக் கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நரகக் குழியிலிருந்து தப்பிப் பிழைத்த சிறுமிகள் அளித்த வாக்குமூலங்கள் பாராளுமன்றத்தையே உறைய வைத்துள்ளன. பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், “எனக்கு 13 வயது இருக்கும்போது இந்தக் கும்பலிடம் சிக்கினேன்; அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 முதல் 700 ஆண்களால் நான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பெண்ணோ, “விலங்குகளை அடைப்பது போல, நாய் கூண்டுகளுக்குள் 15 முதல் 20 சிறுமிகள் கொடூரமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்  ரூபர்ட் லோவ், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் நேரடியாகப் பேசித் திரட்டிய இந்த வாக்குமூலங்களை பாராளுமன்றத்தில் அறிக்கையாக வாசித்தபோதே இக்கோர விபரங்கள் வெளியில் வந்தன.

அரசு நடத்திய முதற்கட்ட விசாரணையில், இக்கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இக்கும்பல் திட்டமிட்டே பிரிட்டனின் வெள்ளையின மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை மட்டுமே குறிவைத்து இந்த வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது சில நாட்களில் நடந்த சம்பவம் அல்ல; கடந்த 1997 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், பிரிட்டனின் ‘ரோதர்ஹாம்’ (Rotherham) என்ற ஒரேயொரு பகுதியில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நெட்வொர்க்கால் சீரழிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய கொடூரம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும், காவல்துறை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி தற்போது பிரிட்டனில் பூதாகரமாக வெடித்துள்ளது.

எச்சரிக்கை: உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ‘நண்பர்கள்’ வேடத்தில் வரும் பாலியல் வேட்டை மிருகங்கள்

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அந்தப் பழமையான அவை அன்று வழக்கத்திற்கு மாறாக நிசப்தமாகக் கிடந்தது. அரசியல் பேச்சுகளோ, கட்சிப் பூசல்களோ அங்கு ஒலிக்கவில்லை. சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் (Rupert Lowe), கடந்த கால் நூற்றாண்டுகளாக அதிகார வர்க்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்ட, அமுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களின் வாக்குமூலங்களை வாசிக்கத் தொடங்கியபோது அந்த அவையே உறைந்துபோனது.
அவர் வாசித்தவை வெறும் வரிகள் அல்ல; நரகத்தின் வாசலில் நின்று மீண்டு வந்த பிஞ்சுகளின் மரண ஓலம்!
 
 
“எனக்கு 13 வயது இருக்கும்போதுதான் அவர்கள் என் வாழ்வில் வந்தார்கள். என்னை நேசிப்பதாகக் கூறினார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மனித மிருகங்களால் நான் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன்…” – இது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாக்குமூலம்.
 
மற்றொரு 13 வயதுச் சிறுமியின் உடலுக்குள் மதுப் பாட்டிலை உட்செலுத்தி, அது உள்ளேயே உடைந்த கொடூரம்… வாகனங்களின் பின்புறமிருந்த நாய் கூண்டுகளுக்குள் விலங்குகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருந்த 11, 12 வயதுச் சிறுமிகள்… ஒரு பச்சிளம் குழந்தையின் முகத்தில் எரியும் சிகரெட்டைக் கொண்டு சுட்ட வடுக்கள்… இவையனைத்தும் ஏதோ ஒரு சில நாட்களில் நடந்தவை அல்ல. ‘குரூமிங் கேங்’ (Grooming Gangs) என்ற பெயரில் பிரிட்டன் மண்ணில் பல தசாப்தங்களாக அரங்கேறி வரும் திட்டமிட்ட பாலியல் வேட்டை!
 
பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட, பிறரால் கேலிக்குள்ளான அல்லது பெற்றோரின் சரியான கவனிப்பு இல்லாத பலவீனமான சிறுமிகளைத்தான் இந்த வேட்டை மிருகங்கள் முதலில் குறிவைக்கின்றன. “அன்பாகப் பேசி, தங்களை உற்ற நண்பர்கள் என்று நம்ப வைக்கிறார்கள். பள்ளிப் பருவத்தில் தங்களுக்குக் கிடைக்கும் இந்தத் திடீர் கவனத்தையும், சிறிய ரகசியப் பரிசுகளையும் அந்தப் பிஞ்சுகள் ‘உண்மையான அன்பு’ என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்” என்கிறது லோவ் அவர்களின் விசாரணை அறிக்கை.
 
சிறுமிகள் தங்களை முழுமையாக நம்பத் தொடங்கியவுடன், இந்தக் கும்பல் அவர்களைப் பார்ட்டிகளுக்கு அழைத்துச் சென்று, மது மற்றும் கஞ்சா போன்ற கடுமையான போதைப்பொருட்களுக்கு அடிமையாக்குகிறது. தங்களுக்குள் என்ன நடக்கிறது, தாங்கள் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்பதை உணரும் நனவு நிலையைக்கூட அந்தச் சிறுமிகள் இழந்துவிடுகிறார்கள்.
 
பின்னர், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்; அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். “நீ என்னுடன் வரவில்லை என்றால், உன் தாயைக் கடத்திச் சென்றுவிடுவேன்” என்றும், “உன் வீட்டின் மீது வெடிகுண்டு வீசுவேன்” என்றும் மிரட்டப்பட்டு, கார்களிலும், பூங்காக்களிலும், பல ஆண்களின் பாலியல் பசிக்கு அவர்கள் இரையாக்கப்படுகிறார்கள். இந்த நரக வலைக்குள் சிக்கிய பல சிறுமிகள் மிகச் சிறிய வயதிலேயே கர்ப்பமடைந்து, கட்டாயக் கருக்கலைப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல பெற்றெடுத்த குழந்தைகளுக்குத் தங்களின் தந்தை யார் என்றுகூடத் தெரியாது!
 
இவ்வளவு பெரிய கொடூரம் பிரிட்டனின் ரோச்டேல், ரோதர்ஹாம் மற்றும் டெல்ஃபோர்ட் போன்ற பகுதிகளில் பகிரங்கமாக நடந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் போலீசில் முறையிட்டபோதும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
அங்குதான் ‘இனவெறி’ (Racism) என்ற அரசியல் போர்வையைக் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். பிடிபட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானிய வசம் சார்ந்த ஆசிய வம்சாவளியினர் என்பதால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கு ‘இனவெறியர்கள்’ என்ற முத்திரை விழுந்துவிடுமோ என்று பயந்து காவல்துறையும், உள்ளூர் அரசு அதிகாரிகளும் பல ஆண்டுகளாக இந்த விவகாரங்களைத் திட்டமிட்டே மூடிமறைத்தனர்.
 
ஒருமுறை, 13 வயதுச் சிறுமி ஒருத்தி கிழிந்த ஆடைகளுடன் போதை நிலையில் கத்திக்கொண்டிருந்தபோது, போலீசார் அங்கிருந்த குற்றவாளிச் சிறுவர்களை விட்டுவிட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியையே கைது செய்த அவலமும் பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.
 
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு: நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?
பிரிட்டனின் ‘தி சில்ரன்ஸ் சொசைட்டி’ என்ற அமைப்பு, சுமார் 50,000 சிறுமிகள் இத்தகைய நெட்வொர்க்குகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. ஆனால், இதில் 5,000 பேர் மட்டுமே வெளியில் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தரவுகள் நமக்கும் நம் சமூகத்திற்கும் சொல்லும் பாடம் ஒன்றுதான்:
 
பிள்ளைகளுடன் பேசுங்கள்: உங்கள் பிள்ளைகள் பள்ளியிலோ அல்லது வெளியிலோ தனிமையாக உணர்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். அவர்களுடன் தினமும் மனம் திறந்து பேசுங்கள்.
அதிடீர் மாற்றங்களைக் கவனியுங்கள்: பிள்ளைகளுக்கு திடீரெனக் கிடைக்கும் ஆடம்பரப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்கள் அல்லது அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை ஒருபோதும் சாதாரணமாகக் கடந்து போகாதீர்கள்.
 
அன்பே ஆகச்சிறந்த அரண்: உங்கள் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே போதிய அன்பும், பாதுகாப்பும், கவனமும் கிடைத்துவிட்டால், வெளியில் யாரோ ஒரு அந்நியன் காட்டும் போலி அன்பை நோக்கி அவர்கள் ஓடத் தேவிருக்காது.
 
“இறுதியாகவாவது இந்தச் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்று ரூபர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் உதிர்த்த வார்த்தைகள், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பெற்றோரின் மனசாட்சியையும் தட்டி எழுப்ப வேண்டிய ஒரு பிரகடனம்! பிள்ளைகளைப் பாதுகாப்போம்; விழிப்புடன் இருப்போம்!

 

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-700-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/50-378085

NO COMMENTS

Exit mobile version