Home இலங்கை நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்க்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பொதுஜன பெரமுன அழைப்பு

நீதித்துறையில் அரசியல் தலையீட்டை எதிர்க்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பொதுஜன பெரமுன அழைப்பு

0
image

நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அரசின் இந்த முயற்சி ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட பாரதூரமான அச்சுறுத்தல் என்று சாடியுள்ளார்.

அரசின் இத்தகைய முயற்சி ஒரு வெட்கக்கேடான செயலாகும். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவே அரசு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. 

ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதன் மூலம் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சுதந்திரமான செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்பதுடன், அது நீதித்துறையின் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கும்.

இந்த முன்மொழிவுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்றும், சட்டத்தரணிகள் சங்கமும் இதற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் இது குறித்துப் பேச்சு நடத்தியதைக் குறிப்பிட்ட சாகர காரியவசம், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதற்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source: https://samugammedia.com/all-opposition-parties-should-unite-to-oppose-political-interference-in-the-judiciary—call-from-the-public-front-1783838310

NO COMMENTS

Exit mobile version