மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது, நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.
குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அரசியலமைப்புவாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன், மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை அரச தலைவர் மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
