Home இலங்கை பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் ரயில் சேவைகள்

பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் ரயில் சேவைகள்

0
image

ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு தொடர்ந்துவரும் நிலையில், அனைத்து அலுவலக ரயில் சேவைகளும் தற்போது வழமைபோல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு ரயில் சேவையைத் தவிர, ஏனைய அனைத்து ரயில் சேவைகளையும் வழமைபோல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரியும் ஊடகப் பேச்சாளருமான அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில்வே பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

எனினும், பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே நேற்று பிற்பகல் பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால், பணிப்புறக்கணிப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான ரயில்வே நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் இணைந்துள்ளதாகவும், சிலர் பணிப்புறக்கணிப்பை முறியடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் சுமேத சோமரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படவில்லை எனவும், ரயில்வே திணைக்களத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தாலும் நாட்டின் அனைத்து ரயில் பாதைகளிலும் சேவைகளை வழமைபோல் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை கரையோரப் பாதையில் 13 ரயில் சேவைகளும், சிலாபம் பாதையில் 11 சேவைகளும், பிரதான மற்றும் வடக்கு ரயில் பாதைகளில் 15 சேவைகளும், களனி பள்ளத்தாக்குப் பாதையில் 7 ரயில் சேவைகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/train-services-operating-as-usual-despite-the-strike-1789619846

NO COMMENTS

Exit mobile version