Home இலங்கை பயணப் பெட்டிக்குள் 64 புறாக்கள்! கடத்த முயன்ற சகோதரர்களுக்கு கட்டுநாயக்கவில் அதிர்ச்சி

பயணப் பெட்டிக்குள் 64 புறாக்கள்! கடத்த முயன்ற சகோதரர்களுக்கு கட்டுநாயக்கவில் அதிர்ச்சி

0
image

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்து 64 புறாக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற  இரு சகோதரர்களுக்கு சுங்கப் பிரிவினர் மொத்தம் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 34 இலட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK652 விமானம் மூலம் நேற்று (25) சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது, சந்தேகநபர்கள் கொண்டு வந்த 8 பயணப் பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அந்தப் பெட்டிகளுக்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவற்றில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க விசாரணைகளின் முடிவில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவரில் ஒருவருக்கு 4 இலட்சம் ரூபாயும், மற்றையவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் என மொத்தம் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/64-birds-in-the-travel-box-shock-at-kattunayak-after-brothers-tried-to-smuggle-them-1785065510

NO COMMENTS

Exit mobile version