வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் வழங்கும் ‘எதெர திரிய’ (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த கடன்களுக்காக செலுத்த வேண்டிய வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மீளச் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீட்டுக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
மேலும், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இந்தக் கடன்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தாம் ஈட்டும் வருமானத்தை பாதுகாப்பான முறையில் வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு உதவும் வகையில் இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
