பலாங்கொடை – பின்னவல, எல்லராவ பிரதேசத்தில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த மூன்று மாணவிகளும் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய மூன்று மாணவிகளும் பலாங்கொடை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றனர்.
இவர்கள் நேற்று (31) தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த நிலையில் வீடு திரும்பாததால், பெற்றோர்களால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மாணவிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் திருகோணமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/missing-students-from-palangode-found-in-tirunelveli-1788250950
