போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய செயல்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிநபர்களை மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் உருவாகும் சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்க நடவடிக்கைகளுடன் மதத் தலைவர்கள், பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் வழக்குகளில் தாமதத்தை ஏற்படுத்தும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் செயல்முறை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவுக்கு ஏற்ப வழக்குகளை வகைப்படுத்தி, இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிப்பது மற்றும் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையின் உதவியைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு கெமரா அல்லது CCTV அமைப்புகளை பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
