Home இலங்கை பௌர்ணமி தினத்தில் ரயில் சேவையில் குழப்பம்: பயணிகள் கடும் நெரிசலில்

பௌர்ணமி தினத்தில் ரயில் சேவையில் குழப்பம்: பயணிகள் கடும் நெரிசலில்

0
image

 

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு ரயில், காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த ரயிலின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, பின்னால் வந்த யாழ்தேவி விரைவு ரயிலில் காங்கேசன்துறை ரயிலின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது. இதனால், இரு ரயில்களின் பயணிகளும் ஒரே ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட ரயில் வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று ரயில் சேவை இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொடை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள ‘நாவல – நாரஹேன்பிட்டி’ ரயில் கடவையில் அத்தியாவசியப் புனரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், களனிவெளி பாதையில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 01-ஆம் திகதி காலை 07:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 08:00 மணி வரை கொழும்பு கோட்டைக்கும் நுகேகொடைக்கும் இடையிலான ரயில் சேவைகள் முழுமையாக இடம்பெறாது.

புனரமைப்புப் பணிகள் நடைபெறும் நாட்களின் பிற்பகலிலும், ஞாயிற்றுக்கிழமை காலையிலும் களனிவெளி பாதையில் இயக்கப்படும் ரயில்களுக்கான மாற்று நேர அட்டவணையை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Source: https://samugammedia.com/confusion-in-train-services-on-full-moon-day-passengers-in-heavy-crowd-1785305470

NO COMMENTS

Exit mobile version