“நாங்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் மனிதவியல் துறை, உளவியல் ஆலோசனை போன்றவற்றுக்குப் போதிய நிபுணத்துவம் இல்லை. மனிதப் புதை குழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்கள் போதியளவில் இல்லை.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி ர.சுரேந்திரகுமார் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் இணைந்து செயற்பட்டு வருகின்றது என்றார்.
“தற்போது செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் மருத்துவ பீடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் நோக்கில் ஒரு மனிதவியல் ஆய்வகத்தையும், மரபணு,(டி.என்.ஏ.) ஆய்வகத்தையும் உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம்.
எங்களுடைய முயற்சியின் மூலம் ஆய்வுகூடத்திற்குத் தேவையான சில இயந்திரங்களை பெற்றுள்ளோம். ஆனால் ஆய்வுகூடத்தை முழுமையாக அமைக்க இன்னும் கூடுதல் உதவி தேவைப்படுகின்றது.
எனவே, நீதி அமைச்சரும் காணாமல் போனோருக்கான அலுவலகமும் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், போதுமான வசதிகள் இல்லாமல் இத்தனை தரவுகளைப் பராமரிப்பதும், பகுப்பாய்வு செய்வதும், சரியான முறையில் வகைப்படுத்துவதும், அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்குவதும் மிகவும் கடினமாக உள்ளன.” – என்றும் அவர் கூறினார்.
இதற்கு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில்,
“நாங்கள் ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் மனிதவியல் துறை, உளவியல் ஆலோசனை ஆகியவற்றில் போதிய நிபுணத்துவம் இல்லை. காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகமும் இணைந்து மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய ஆய்வுகூடங்களை நிறுவுவதற்கும் அதனை மேம்படுத்துவதற்குரிய செயற்றிட்டங்களுக்கான முன்மொழிவுகளைச் செய்து வருகின்றோம்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திடமும் ஏதேனும் முன்மொழிவுகளை வைத்திருந்தால் அதனை நீங்கள் காணாமல்போனோருக்கான அலுவலகத்திடம் கொடுக்கலாம். உங்களுடைய முன்மொழிவுகளுக்கு நிதி உதவிகள் வழங்குவதற்கு பல நன்கொடையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் உதவுவோம்.
மனிதப் புதைகுழியில் ஆய்வு செய்வதற்குரிய சரியான தொல்லியல் நிபுணர்கள் போதியளவில் இல்லை. எனவே நிபுணர்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய பரிசோதனைக் கூடங்களையும் மேம்படுத்த வேண்டும். அரசாங்கப் பகுப்பாய்வு ஆய்வுகூடங்களினுடைய வளங்களை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க வேண்டும். எதிர்காலத் திட்டமிடல்களின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்து மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.” – என்றார்.
