ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலைக்கும் பத்தனைக்கும் இடையிலான பகுதியில் ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலே உள்ள பகுதியில் இருந்து மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதிக்கு சேதம் ஏற்படும் அபாயத்தைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று (14) முதல் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் மலை உச்சியில் உள்ள பல மரங்களின் வேர்கள் வெளியே தெரிவதாகவும், தற்போது இப்பகுதியில் நிலவும் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக அந்த மரங்கள் வீதியில் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
அபாயகரமான மரங்களை அகற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
