இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் தீவிர குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை அதிகரித்துள்ள நிலையில், மரண தண்டனை தொடர்பான விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தர்ஷன குருப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எனினும், தவறாக வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ள முடியும் என்ற போதிலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அதனை மீண்டும் மாற்றியமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னைய வழக்கு ஒன்றில் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வறிய ஒருவர், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இடம்பெற்ற மறுவிசாரணையில் மரபணு அறிவியல் சான்றுகள் மூலம் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
எனவே, மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித்துறையில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வசதியற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தகுதியான இலவச சட்ட உதவியை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும், போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
