Home இலங்கை மலேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

0
image

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

‘இரத்மலானை சைமா’ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் நேற்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 41 வயதுடைய பிரதான சந்தேகநபர், மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக கண்டி நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் இடம்பெற்று வருகின்றன. 

2014ஆம் ஆண்டு பேராதனை பகுதியில் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்று தாக்கியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்றுமொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், சந்தேகநபருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிஸ்சை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டொன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதான சந்தேகநபரான ‘இரத்மலானை சைமா’வுடன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களில் 35 வயதுடைய இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்சையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/investigation-begins-into-gang-members-arrested-in-malaysia-1786423948

NO COMMENTS

Exit mobile version