மலையகத்தின் தந்தை எனப் போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) நினைவுகூரப்பட்டது.
இதனை முன்னிட்டு கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் அமைந்துள்ள சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
மேலும், கொட்டகலை சி.எல்.எப். வளாகம் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் அவரது ஜனன தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பணியாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராகக் கருதப்படுகிறார்.
இலங்கை இந்திய காங்கிரஸின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவர், பின்னர் அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்ற பின்னரும் அதன் தலைவராக இருந்து மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்.
பல முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்த அவர், மலையக மக்களுக்காக மட்டுமன்றி இலங்கையின் முக்கிய தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
