Home இலங்கை மலையக புகையிரத பாதை சீரமைப்பு தீவிரம்… விரைவில் கண்டி வரை சேவை

மலையக புகையிரத பாதை சீரமைப்பு தீவிரம்… விரைவில் கண்டி வரை சேவை

0
image

மலையகத்துக்கான புகையிரத பாதைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

அதேபோன்று, ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொடை, கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா வரையிலான புகையிரத பாதைகளும் விரைவாக சீரமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஏற்பட்ட தித்வா புயலைத் தொடர்ந்து, மலையகப் பகுதிகளில் பாரியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டன. 

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை வரையிலான புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தன.

தற்போது பதுளை முதல் நானுஓயா வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் மாதங்களில் பதுளை முதல் கண்டி வரையிலான புகையிரத சேவைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக, நானுஓயா புகையிரத சேவைகள் பொறியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த சுமார் பத்து மாதங்களாக மலையகப் பகுதியில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்ததால், புகையிரதத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், மலையகத்தில் உள்ள ஒரு சில புகையிரத நிலையங்களைத் தவிர, பெரும்பாலான நிலையங்களின் புகையிரத மேடைகளை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள புகையிரத பெட்டிகளில் ஏறும்போது, மேடைக்கும் புகையிரத பெட்டிக்கும் இடையில் சுமார் இரண்டு அடி உயர வித்தியாசம் காணப்படுவதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொடை, கிரேட் வெஸ்டன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள புகையிரத நிலையங்களின் மேடைகளை உயர்த்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/upland-railway-renovation-in-full-swing-service-to-kandy-soon-1788502471

NO COMMENTS

Exit mobile version