Home இலங்கை மஸ்கெலியாவில் மர்ம மரணம்: சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு

மஸ்கெலியாவில் மர்ம மரணம்: சாலையோரத்தில் ஆண் சடலமாக மீட்பு

0
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலன்டில் தோட்டம், பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாகக் காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின் கவனத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் பேரில் மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்தவர் மஸ்கெலியா நகரின் பேருந்து நிலைய வீதியில் வசித்து வந்த 48 வயதுடைய பரமேஸ்வரன் ஆனந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும், உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/mysterious-death-in-mascala-mans-body-found-by-the-roadside-1783515724

NO COMMENTS

Exit mobile version