Home இலங்கை மஹர சிறைச்சாலைக்குள் பயங்கர மோதல்- அலுவலகங்களுக்கு தீ வைப்பு: 4 கைதிகள் காயம்!

மஹர சிறைச்சாலைக்குள் பயங்கர மோதல்- அலுவலகங்களுக்கு தீ வைப்பு: 4 கைதிகள் காயம்!

0
image

மஹர சிறைச்சாலையில் இன்று பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் முறுகல் நிலை காரணமாக பெரும் அமைதியின்மையும் பதற்றமும் நிலவி வருகின்றது. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த மோதலின் போது கைதிகள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றுக்குத் தீ வைத்துள்ளனர். 

பரவிய தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வன்முறைச் சம்பவங்களில் 4 கைதிகள் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைக்குள் நிலவும் பதற்றத்தைக் தணிக்கும் வகையில் மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றிலும், வெளியே பாதுகாப்புக்காகப் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் கைதிகளைப் பார்ப்பதற்காக அவர்களது உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும்,  இந்த அமைதியின்மை காரணமாக அவர்களை உள்ளே  செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 

இதனால் உறவினர்கள் சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு முன்பாகவே தங்கியுள்ளனர்.

அங்கிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

“சிறைச்சாலையின் உட்பகுதியிலிருந்து பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சத்தங்கள் கேட்டன”எனக் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த நிலைமையை மீண்டும் முழுமையாகத்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறைச்சாலை நிர்வாகமும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/violent-clash-inside-mahara-prison–offices-set-on-fire-4-inmates-injured-1785594012

NO COMMENTS

Exit mobile version