நாட்டில் நீதிபதிகளின் பதவிக் காலத்தை ஓராண்டால் நீடிப்பது பொதுமக்களுக்கோ அல்லது சர்வதேச நீதித்துறை அமைப்புகளுக்கோ எந்தவிதப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றும், ஆனால் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற பயத்தினாலேயே ஒரு குறிப்பிட்ட குழுவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (06) ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கு எந்தவித வயது எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஊன்றுகோல் உதவியுடன் நடந்தாலும் அரசியலை கைவிடத் தயாராக இல்லை, அதேபோல் ரணில் விக்ரமசிங்கவும் தனது மருத்துவச் சிகிச்சைகளைச் செய்துகொண்டு, 70 வயதைக் கடந்த நிலையிலும் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் நாற்காலியிலோ அல்லது சக்கர நாற்காலியிலோ கூட பதவிக்கு வர முடியும் என்ற நிலை இருக்கும்போது, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மாத்திரம் என்ன தவறு இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களின் வயது எல்லை குறித்து எந்தச் சட்டமும் இயற்றப்படாத நிலையில், நீதித்துறையின் பரிந்துரைகளை எதிர்ப்பதன் பின்னணியில் உள்ள சுயநல நோக்கம் மிகவும் தெளிவானது என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும், தாங்கள் செய்த குற்றங்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு, அதற்கான விசாரணைகள் தீவிரமடையும் என்ற அச்சமே இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணம், நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்கவும், நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டவும் அரசாங்கம் தேவையான அனைத்து கடுமையான முடிவுகளையும் எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
