Home இலங்கை மாட்டிற்கு புல் வெட்டச் சென்ற குடும்பஸ்தர் வயலில் சடலமாக மீட்பு! மட்டக்களப்பில் சோகம்

மாட்டிற்கு புல் வெட்டச் சென்ற குடும்பஸ்தர் வயலில் சடலமாக மீட்பு! மட்டக்களப்பில் சோகம்

0
image

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியில் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா நந்தகுமார் வயல் நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (01) மாலை தனது மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காக வீட்டிலிருந்து சென்ற அவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது, இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர்.

உயிரிழந்தவர் ஏற்கனவே உடல்நலக் குறைபாட்டால் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்று (02) காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகத்திற்கிடமான காரணங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் குடும்பம் மிகவும் வறிய பொருளாதார நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கிரியைகளுக்கான போக்குவரத்து வசதிக்காக போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனனின் விசேட அனுமதியுடன் பிரதேச சபையின் வாகன உதவி வழங்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/husband-who-went-to-cut-grass-for-the-cow-found-dead-in-the-field-sadness-in-batticaloa-1782978122

NO COMMENTS

Exit mobile version