திபெத்தில் மீண்டும் நீர்த்தேக்க அணையொன்று உடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நேபாளம் இன்று (28) ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை உயரமான, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நேபாள பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக பெருமளவான பனி மற்றும் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு, நேபாளத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின்னர் நாட்டில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பேரிடராக இது கருதப்படுகிறது.
இந்நிலையில், புதிய வெள்ள அபாயம் காரணமாக திபெத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீனா தனது மீட்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனா–நேபாள எல்லைப் பகுதியில் நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான பெருமளவான குப்பைகளால் ஏற்பட்ட ஏரி தற்போது மீட்புக் குழுவினர் சென்றுகொண்டிருந்த ஜியிரோங் எல்லைப் பகுதியை நோக்கி வழிந்தோடத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (NDRRMA) செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத், சில பகுதிகளில் நீர்மட்டம் ஆரம்பகட்டமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரசுவா பகுதியில் போதே கோஷி நதியில் ஏற்கனவே பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த அதே பகுதியில் செம்மண் கலந்த நீரின் ஓட்டம் சற்று அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் போதே கோஷி மற்றும் திரிசூலி நதிக்கரைகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், அத்துடன் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அதிக அவதானத்துடன் இருக்குமாறும், ஏதேனும் ஆபத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Source: https://samugammedia.com/another-major-flood-risk-warning-to-move-to-safe-places-in-nepal-1787919627
