காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர்.
வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர், வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.
நீண்டகாலமாக தமது உறவினர்களின் நிலை குறித்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் குடும்பங்கள், தங்களிடம் காணப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், அது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
