Home இலங்கை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதியுதவித் திட்டம் வழங்கல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதியுதவித் திட்டம் வழங்கல்!

0
image

2026 ஜூன் 02 ஆம் திகதி, இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகப் பின்னணியைச் சேர்ந்த திறமையான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய நன்கொடையின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதியுதவியை வழங்கினார். இத்திட்டம் 2025–26 கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 2023–24 கல்வியாண்டில் இந்திய நன்கொடையின் கீழ் ஒரு நிதியுதவித் திட்டம் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் கீழ், பொருளாதார நிலை மற்றும் கல்விசார் திறமையை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு மாதாந்தம் இலங்கை ரூபாய் 5,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் பயன்தன்மை குறித்து கிடைத்த சாதகமான பின்னூட்டங்களையும், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களிடமிருந்து கிடைத்த திட்ட விரிவாக்கக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, இலங்கை ஜனாதிபதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள் 2024 டிசம்பரில் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக மேம்படுத்தப்பட்ட நிதியுதவித் திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 2025–26 கல்வியாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முதலாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG) மாணவர்கள் 100 பேருக்கு, மாணவர் ஒருவருக்கு மாதம் இலங்கை ரூபாய் 7,500 நிதியுதவி வழங்கப்படும். இந்த உதவித்தொகை அவர்கள் தங்களது கல்விக் காலம் முடியும் வரை தொடர்ச்சியாக வழங்கப்படும். இதன் விளைவாக, திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காவது ஆண்டில், பல்கலைக்கழகத்தில் மொத்தம் 400 மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவார்கள்.

நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா அவர்கள், நிதியுதவி கல்விசார் முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, பயனாளி மாணவர்கள் தங்களது கல்வி, முன்னேற்றம் மற்றும் எதிர்கால வளர்ச்சி போன்ற உண்மையில் முக்கியமான விடயங்களில் முழு கவனத்தையும் செலுத்த உதவுகிறது என வலியுறுத்தினார்.

இந்த முயற்சி, இலங்கையின் கல்வித் துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள பல முன்னைய மற்றும் தற்போதைய அபிவிருத்தி கூட்டாண்மைத் திட்டங்களின் தொடர்ச்சியாகும். அவற்றில் சில முக்கியமான உதாரணங்கள்: ருஹுணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கத்தின் நிறுவல்; வட மாகாணத்தில் 79-க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் புனரமைப்பு; நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 110 பேருந்துகள் வழங்கல்; தென் மாகாணத்தில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகங்கள் அமைத்தல்; வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவையில் பல இன, மும்மொழிப் பாடசாலை கட்டுமானம் போன்றவை அடங்கும். மேலும், “9 தோட்டப் பாடசாலைகளின் தரமுயர்த்தல்” மற்றும் “தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல்” ஆகிய திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன

Source: https://samugammedia.com/indias-enhanced-financial-aid-scheme-for-jaffna-university-students-launched-1780676704

NO COMMENTS

Exit mobile version