Home இலங்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்குவதில் அரசாங்கம் இழுத்தடிப்பு: இம்ரான் மகரூப் எம்.பி சாடல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வழங்குவதில் அரசாங்கம் இழுத்தடிப்பு: இம்ரான் மகரூப் எம்.பி சாடல்!

0
image

திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்குவதில், அரசாங்கம் திட்டமிட்டபடி இழுத்தடிப்புகளைச் செய்து வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று (04) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​அவர் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

​”கடந்த கால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த திருகோணமலை மாவட்ட மக்கள் தற்போது தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.

எனினும், அவர்களது வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளமையால், தற்போதும் தற்காலிக இருப்பிடங்களிலேயே அவர்கள் சொல்லொணாத் துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

​அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்களின் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டு, அவர்களது பெயர்கள் இறுதிப் பட்டியலில் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான வீட்டுப் படிக் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் தேவையற்ற இழுத்தடிப்புகளைச் செய்து வருகின்றது.

​சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுக்கும் அப்பால், மேலதிக ஆவணங்களைக் கோரி, அவை சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி பலரது வீட்டுக்கான கொடுப்பனவுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

​கிராம உத்தியோகத்தர்களும் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான வழிகாட்டல்களின்படி உரிய தகைமைகள், புனர்வாழ்வு அட்டைகள் போன்ற அனைத்தும் மக்களிடம் உள்ளன. வீடுகள் பாதிக்கப்பட்டதை நேரில் அவதானித்து சிபார்சுக்குழுவும் தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

​நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது இம்மக்களிடம் மேலதிகமாக ‘பொலிஸ் அறிக்கை’ கோரப்படுகின்றது. சுற்றறிக்கையில் இல்லாத ஒரு விடயத்தை ஏன் கேட்கிறீர்கள் என்று அதிகாரிகளிடம் வினவினால், அது ‘மேல்மட்ட உத்தரவு’ என்று கூறி தட்டிக்கழிக்கின்றனர்.” என்று குறிப்பிட்டார்.

“யுத்த காலத்தில் பொலிஸ் அறிக்கைகளைத் தொலைத்த பொதுமக்கள், தற்போது பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று அதன் பிரதியைக் கோரினால், பழைய ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று பொலிஸார் திருப்பி அனுப்புகின்றனர். 

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புத் குழுத் தலைவரான பிரதியமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளித்த போதிலும், இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.” என்றும் இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டினார்.

​”எனவே, அரசாங்கம் மக்களுக்கு வீடு வழங்குவது போல் காட்டி, உண்மையில் அதனை வழங்காமல் ஏமாற்றுவதற்கான முயற்சிகளையே முன்னெடுத்து வருகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுகின்றது. 

இது ‘ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறிப்பது’ போன்றதொரு செயலாகும்.

​அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக, இது போன்ற தந்திரங்களைக் கையாண்டு நிதியை மீதப்படுத்த முயற்சிக்கின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/government-is-delaying-in-providing-houses-to-war-affected-people-imran-magaroop-mp-sadal-1780578136

NO COMMENTS

Exit mobile version