வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் முறையற்ற வகையில் பணம் கோரப்படுவதாகவும், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தாய் ஒருவர்,கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தனது 10 வயதிற்குட்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோது, ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அவற்றைச் சரிசெய்து கடவுச்சீட்டு தர 250,000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளது.
எனினும், அந்தத் தாய் எவ்வித மேலதிகப் பணத்தையும் வழங்க மறுத்து, அதே விண்ணப்பங்களுடன் கொழும்பில் உள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு எவ்வித குறைபாடுகளும் இன்றி, எவ்வித மேலதிகக் கட்டணமும் இன்றி, ஒரே நாளில் அவசர சேவையின் கீழ் தனது இரு பிள்ளைகளுக்கும் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுள்ளார்.
இதே போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், “வவுனியா அலுவலகத்தில் இவ்வாறான முறைகேடுகள் திட்டமிட்டே நடைபெறுகின்றன. வெளிநாடு செல்வதற்காக அவசரமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களிடம் இலஞ்சம் கோரப்படுகிறது.
சிலர் கொழும்பு செல்வதற்கான அலைச்சல்களைத் தவிர்க்கும் பொருட்டு, வவுனியா அலுவலகத்தில் கேட்கும் பணத்தைக் கட்டாயத்தின் பேரில் செலுத்தி கடவுச்சீட்டைப் பெற்றுச் செல்கின்றனர்,” எனத் தெரிவிக்கின்றனர்.
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் இத்தகைய முறைகேடுகளையும், இடைத்தரகர்களின் சட்டவிரோதச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தவும், உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி முறையான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
