Home இலங்கை வான்பாயும் மட்டத்தை அண்மித்த காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள்! தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

வான்பாயும் மட்டத்தை அண்மித்த காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள்! தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

0
image

மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகார பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (10) காலை நிலவரப்படி, இரு நீர்த்தேக்கங்களும் வான்பாயும் மட்டத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்திலிருந்து 1.2 அடி மாத்திரமே குறைவாக காணப்படுவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அப்பகுதியில் 25 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேவேளை, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்திலிருந்து 3.4 அடி வரை உயர்ந்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 29 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இரு பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதால், அவற்றுடன் தொடர்புடைய கெனியன், லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர நீர்மின் நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்தால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மஸ்கெலியா ஓயாவின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்மின்நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/kasaltree-close-to-the-sky-high-missiles-and-flooded-with-water-warning-for-people-in-low-lying-areas-1786343000

NO COMMENTS

Exit mobile version