நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் கைதிகள் வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றநிலை உருவாகியுள்ளது.
சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து சிறைச்சாலை வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், கலகத் தடுப்புப் பிரிவு அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமது வழக்குகளை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று காலை முதல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த சில கைதிகள் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பல்லன்சேன சிறைச்சாலையிலும் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/prisoners-at-pallasena-protest-sealing-the-mouth-entrance-1786088212
