Home இலங்கை விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும்...

விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் குற்றச்சாட்டு

0
image

“விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று ஒட்டுமொத்த விவசாயிகளையும் நட்டாற்றில் கைவிட்டு விட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

CIFL நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய அரசு எதிர்க்கட்சியில் இருந்த சமயம், நாட்டு மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் சிந்திய கண்ணீரை இன்று சிந்துவதாகத் தெரியவில்லை. தற்சமயம் ஒட்டுமொத்த விவசாயிகளும் விதை, உரம், விவசாய இரசாயன நாசினிகள் மற்றும் விவசாய உபகரணங்களின் விலையேற்றம், யானை – மனித மோதல்கள், அறுவடைக்கு நிலையான விலை இல்லாமை போன்ற பன்முகப் பிரச்சினைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைத்து, கடுமையான உற்பத்திச் செலவுக்கு மத்தியில் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளைச் செய்து வந்த விவசாயிகளுக்கு, இறுதியில் அவர்கள் எதிர்பார்க்கும் நியாயமான விற்பனை விலை கிடைக்காத அவல நிலையே இந்த அரசிலும் நீடிக்கின்றது. கூடிய உற்பத்திச் செலவில் விளைவிக்கப்பட்ட பொருள்களை உரிய சந்தைப் பெறுமானத்துக்கு விற்றுக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

17 ஆயிரம் ரூபாவாகக் காணப்பட்ட ஒரு மூட்டை உரத்தை 10 ஆயிரத்து 200 ரூபாவுக்குப் பெற்றுத் தருவோம் என்று தற்போதைய விவாசாய அமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால், இன்று நாட்டில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதுடன், உரம் இல்லாத இடங்களே பெருமளவில் காணப்படுகின்றன. விவசாய நடவடிக்கைகளுக்கான செலவீனங்கள் வானளாவிய ரீதியில் உயர்ந்து காணப்படும் போதிலும், இன்று அறுவடைக்கு நியாயமான விலை இல்லை.

தற்போதைய அரசின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இருந்த சமயத்தில், வயல்களுக்குச் சென்று அமர்ந்துகொண்டு ‘ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம்’ என்று பிரஸ்தாபித்தனர். இன்று அந்த விலை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. தற்சமயம் அம்பாறை மாவட்டத்தில் நெல் அறுவடைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன. ஆனால், அங்கு ஒரு கிலோ நெல் வெறும் 70 முதல் 80 ரூபா போன்ற மிகக் குறைந்த விலைக்கே தற்போது விற்பனையாகின்றது.

மறுபுறம், யானை – மனித மோதலினால் விவசாயிகளின் அறுவடைகளும் சொத்துக்களும் தொடர்ச்சியாகச் சேதமடைந்து வருகின்றன. இதனால் மனித உயிர்கள் மட்டுமன்றி யானைகளின் உயிர்களும் அழியும் இவ்வேளையில், அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த ஆளும் தரப்பினரை இன்று களத்தில் எங்குமே காண முடியாமல் போயுள்ளது. அன்று முரசு கொட்டி விவசாயிகளுக்காக அவர்கள் சிந்திய கண்ணீர், இன்று வெறும் முதலைக் கண்ணீராக மாறியுள்ளது.

விவசாய மக்கள் இன்று கண்ணீர் சிந்துமளவுக்கான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, போதுமான உணவைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் நாட்டில் மந்தபோசண நிலை அதிகரித்து வருகின்றது. வறுமை காரணமாகப் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியும் கூடச் சீர்குலைந்து போயுள்ளது. இந்த ஏமாற்று அரசியல் நாடகத்தால் விவசாயிகளும், பொதுமக்களும் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு காலத்தில் இயற்கை உரம் என்ற பெயரில் தரமற்ற கழிவு உரங்களை வழங்கி இந்நாட்டின் விவசாயத்தை அழிக்கும் துரோக நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நடந்தன. இன்றும் கூட விவசாயிகளுக்குத் தரமான உரம் கிடைப்பதில்லை. விவசாயிகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்கங்களும் அவர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையே செய்துள்ளன. இந்த அரசும் அதே பாதையில்தான் பயணிக்கின்றது.

விவசாயிகளின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே இன்றும் என்றும் முன்னிற்கும். விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபா உத்தரவாத விலை கிடைக்கும் வரை, அவர்களுக்காக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தொடர்ந்து நாம் முன்னின்று குரல் கொடுப்போம்.”  என்றார்.

Source: https://samugammedia.com/—————1781862086

NO COMMENTS

Exit mobile version