Home இலங்கை வீட்டில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு – ஏறாவூரில் துயர சம்பவம்

வீட்டில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு – ஏறாவூரில் துயர சம்பவம்

0
image

ஏறாவூரில் அரச பாடசாலை ஆசிரியை ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை, சூசையப்பர் வீதி, 2-ஆம் குறுக்கு பகுதியில் வசித்து வந்த 57 வயதுடைய செல்வராசா நவஜோதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கடந்த  சனிக்கிழமை இரவு, ஆசிரியையின் மூத்த சகோதரியின் இளைய மகள் வீட்டுக்குச் சென்றபோது, ஆசிரியை குப்புற விழுந்து மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார். 

உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஆசிரியை உயர் குருதி அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

உடற்கூராய்வுப் பரிசோதனையில், அவருக்குத் தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆசிரியை, கல்விப் பணியாற்றுவதைத் தாண்டி, மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை போன்ற தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து, இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் சமாதானச் செயற்பாடுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். 

மேலும், தந்தையை இழந்த தனது சகோதரியின் இரண்டு பெண் பிள்ளைகளையும் தனது சொந்தப் பிள்ளைகளைப் போலப் பராமரித்து, அவர்களைப் பல்கலைக்கழகப் படிப்பு வரை படிக்க வைத்த பெருமை இவரையே சாரும் எனச் சமூக ஆர்வலர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Source: https://samugammedia.com/teacher-collapses-and-dies-at-home—tragic-incident-in-erode-1782709631

NO COMMENTS

Exit mobile version