Home இலங்கை வீதியில் சரிந்து வீழ்ந்த கற்பாறை – மரம் முறிவு! கடும் மழையால் மலையகத்தில் தொடரும் அபாயம்

வீதியில் சரிந்து வீழ்ந்த கற்பாறை – மரம் முறிவு! கடும் மழையால் மலையகத்தில் தொடரும் அபாயம்

0
image

மலையகப் பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

 

தொடர்ந்து பெய்து வரும் கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதேச வாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  கண்டி – கலஹா பிரதான வீதியின் நில்லம்பை பகுதியில் கடும் மழை காரணமாக பாரிய கற்பாறை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளதால், அவ்வழியாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த கற்பாறை இதுவரை அகற்றப்படாத நிலையில், பிரதான வீதியில்  போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வட்டவளையிலிருந்து அகரவத்தை, வெளிஓயா ஊடாக ஹட்டன் செல்லும் வீதியில் நேற்று பெய்த கடும் மழையினால் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டித்வா காலப்பகுதியிலும் இதே பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், பொதுமக்களின் முயற்சியினால் சிரமதான முறையில் வீதி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதற்கிடையில், வட்டவளை – லொனக் வீதியில் மீனாட்சி தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மதகு ஒன்று சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நான்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், மதகு முற்றாக சேதமடைந்தால் போக்குவரத்து முழுமையாக தடைப்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அகரவத்தையிலிருந்து லொனக் வரையான சுமார் 3 கிலோமீற்றர் வீதியை புனரமைத்து தருமாறு பல வருடங்களாக பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Source: https://samugammedia.com/collapsed-concrete-block-on-the-street—tree-broken-ongoing-danger-in-the-hilly-area-due-to-heavy-rain-1785655185

NO COMMENTS

Exit mobile version