Home இலங்கை வீதி விலங்குகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு – பிரதமர் ஹரிணி

வீதி விலங்குகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு – பிரதமர் ஹரிணி

0
image

செல்லப்பிராணிகளை வளர்ப்பது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவேளையில், வீதிகளில் உள்ள விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும் அனைவரதும் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) ஆரம்பமான “PET EXPO 2026” கண்காட்சியின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இக்கண்காட்சியானது இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

வீதி விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கண்காட்சி மைதானத்தில் ஒதுக்கப்பட்டிருந்த “ஆலோகா” (Aloka) கண்காட்சி அரங்கையும் பிரதமர் பார்வையிட்டார். 

அங்கு, வீதியோர நாய் குட்டியொன்றைப் பராமரிப்பாளர் ஒருவரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்து, பிரதமர் அந்த அரங்கத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

நாட்டில் கால்நடை வைத்திய சேவை தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சியடைந்து வருவது குறித்துத் தான் மகிழ்ச்சியடைவதாகவும், விகாரைகள் போன்ற பொது இடங்களில் சிறிய நாய் மற்றும் பூனைக்குட்டிகளை கைவிட்டுச் செல்வது தவறான முன்மாதிரியாக அமைந்துள்ளதால், வீதி விலங்குகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். 

அதேபோன்று, விலங்கு நலன்புரிக்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்க முடிந்ததன் மூலம், விலங்குகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

அண்மையில் உலகளவில் பிரபலமடைந்த, இலங்கையின் சிறுமி ஒருவற்கும் முள்ளம்பன்றி ஒன்றிற்கும் இடையிலான தனித்துவமான விலங்குப் பிணைப்பை நினைவுகூர்ந்த பிரதமர், செல்லப்பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு குழந்தைகளின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். 

விலங்குகளுடன் வாழ்வதன் மூலம், குழந்தைகள் தங்களது வாழ்க்கையில் பிறரது வலியை உணர்தல், அன்பு மற்றும் கருணை போன்ற பண்புகளை நடைமுறையில் வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/protecting-stray-animals-is-everyones-responsibility–prime-minister-harini-1784294398

NO COMMENTS

Exit mobile version